தொழில் வரலாறு
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வியாபாரம் மற்றும் தொழில் என்பது பெரும்பாலும் மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது. பல்வேறு துறைகளில் அறிவியல் வளர்ச்சிகள் உருவாக்கிக் கொண்டிருந்தாலும் தொழில் துறையின் அடிப்படையாக விவசாயமே மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. இதை முதல் கட்டம் எனலாம். 1930 களுக்கு பின்பு தொழில் உலகின் கவனம் இயந்திரங்களின் பக்கம் திரும்பியது. இரண்டாம் உலகப்போரினால் உருவான சூழல் மாற்றங்களும் புதிய பொறியியல் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது. போக்குவரத்து, தயாரிப்பு, தொலைத்தொடர்பு என்று பல்வேறு தளங்களிலும் இயந்திரவியலின் ஆதிக்கம் வலுப்பெற்றது. இது இரண்டாம் கட்டம்.
மூன்றாம் கட்டமாக 1970களின் பின்பு மின்னணுவியல் மற்றும் கனிணித்துறைகளின் வளர்ச்சி காரணமாக உலக வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத தலைகீழ் மாற்றங்கள் உருவாகத்தொடங்கின. "அறிவாற்றல்" என்பது மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தியது. கனிணித்துறையில் மென்பொருள் உருவாக்கம் எண்ணற்ற புதிய சாத்தியங்களை உருவாக்கியது. அறிவாற்றலின் முக்கிய விளைவான மென்பொருள் உருவாக்கம் தொழில் உலகில் கற்பனை செய்ய முடியாத தாக்கங்களை ஏற்படுத்தியது. தொழில் துறையில் தொட்டு உணரக்கூடிய பொருள்களுக்கே மதிப்பீடு செய்யப்பட்டு வந்த சூழல் மாறி அறிவாற்றலின் வெளிப்பாடாக உருவான மென்பொருள் ஆக்கங்களுக்கும் பொருளாதார மதிப்பீடுகள் செய்யப்பட்டன. கண்ணுக்குத் தெரியாத இந்த மென்பொருள் நிரல்கள் "அறிவுசார் சொத்து" என்று விளிக்கப்பட்டு அவற்றுக்கு சட்ட ரீதியான சொத்துரிமைகளும் வழங்கப்பட்டன.
மென்பொருள்கள், அடிப்படையில் தொழில்நுட்ப செயல்பாடாக இருந்தாலும் அவற்றின் தேவையும் வடிவமைப்பும் ஏதோ ஒரு நடைமுறை பிரச்சினையை தீர்க்கும் வகையிலேயே இருக்கும். இவ்வாறு ஒரு பிரச்சினையை ஆராய்வதும் அதற்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு தீர்வை வடிவமைப்பதும் ஒரு புதிய அணுகுமுறையாக, கலாச்சாரமாக பரிமளிக்க தொடங்கியது. இதன் அடிப்படையில் ஒரு பிரச்சசினைக்கு தீர்வளிக்கும் வெறும் ஐடியாவுக்கே அதன் சக்திக்கும் எதிர்கால வீச்சுக்கும் ஏற்ற மதிப்பீடு தரும் பொருளாதார கலாச்சாரமும் உருவானது.
அடுத்ததாக இணையம் சார்ந்த தொழில் நுட்பங்களின் வியத்தகு வளர்ச்சிகள் பல மென்பொருள் சார்ந்த தீர்வுகளின் பயனை கோடிக்கணக்கான பயனாளர்களுக்கு நொடியில் எடுத்துச்சென்றது. இத்தகைய தீர்வுகளின் சக்திக்கு ஏற்ப அதன் வளரும் தன்மை அல்லது வளரியல்பு அனுமானிக்கப்பட்டது. ஒரு "புதுமையான தீர்வு" அதி வேகமாக விஸ்வரூப வளர்ச்சி பெறக்கூடிய தன்மையை உருவாக்கிய இந்த இணையம் என்ற மகா சக்தி புதுயுக தொழில் முனைவு என்ற பரிணாம மாற்றத்தின் அடிப்படை என்றால் அது மிகையில்லை.
இணையத்தின் வளர்ச்சியும் அதோடு இணைந்து பிற கனிணித்துறை பிரிவுகளின் வளர்ச்சியும் தொழில்முனைவோர்களை புதுவிதமாக சிந்திக்கத்தூண்டியது. புதிய புதிய தீர்வுகள் தொழில் வடிவம் பெறத்தொடங்கின. கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்ககத்திலும் இணையம் சார்ந்த "டாட் காம்" தொழில்முனைவு புரட்சி உருவானது. இதுவே புதுயுக தொழில்முனைவின் முதல் கட்டம். உருவான இடம் அமெரிக்காவின் சிலிக்கன் வேலி என்று அழைக்கப்படும் கலிபோர்னியா மாகாணம். புதிது புதிதாக பூத்த தொழிநுட்பம் சார்ந்த இந்த தொழில்முனைவுகள் முதல் முதலாக "ஸ்டார்ட் அப்" என்ற பெயரால் அழைக்கப்படத்தொடங்கியதும் இந்த கால கட்டத்தில் தான். இத்தகைய அறிவுசார் தொழில்முனைவுகளுக்கு ஏதுவான சூழல்களும் புதுயுக முதலீட்டு முறைகளும் வடிவம் பெற்றன. குறுகிய காலத்திலேயே இந்த முதல் கட்ட 'டாட் காம்' புரட்சி நீர்த்துப்போனது வேறு கதை. அதை வேறு ஒரு அத்தியாயத்தில் பார்க்கலாம். ஆனால் டாட்காம் பர்ஸ்ட் (dotcom burst) என்று அழைக்கப்படும் அந்த வீழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்த வருடங்களில் புதுயுக தொழில் முனைவின் பல்வேறு சார்பு அம்சங்களும் வலுப்பெற்று புதியதொரு தொழில்முனைவு கலாச்சாரத் தளம் உருவாகத்தொடங்கியது.http://thozhilulagamtamil.blogspot.com/2018/06/blog-post_7.html மெலும் சிறுதொழில் பற்றி அறிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்
Comments
Post a Comment