நன்றாக சம்பாதிக்க தொழில்
குடும்பச் சுமைகளை சுமக்கும் பொருட்டு வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டிலிருக்கும் பெண்கள் வீட்டிலிருந்தபடியேயாவது சம்பாதிப்பது என்று முடிவு செய்தாலும் அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது தெரியாமல் தங்கள் விருப்பத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். இதுகுறித்து சிறு முதலீட்டில் பல பெண் தொழிலதிபர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஜெயஸ்ரீ நாராயணனிடம் பேசினோம். அவர், பெண்கள் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் சிறிய முதலீட்டில் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கக்கூடிய தொழில்கள் ஏராளம் உள்ளன. அதில் சில தொழில்கள் பற்றி கூறினார். அதனை திறம்படச் செய்யும் பெண் தொழிலதிபர்களிடம் நாம் பேசினோம். இனி அவை இங்கே உங்களுக்காக...
புடவை வியாபாரம்
நம் நாட்டிலும் ஏன் நம்மிடையேயும் பரவலாக இயங்கிவரும் ஒரு தொழில் புடவை வியாபாரம். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து பெண்களிடம் என ஆரம்பிக்கும் இந்த வியாபாரம் நாளடைவில் சூடுபிடித்து மற்றவர்களையும் அணுகக்கூடியது. அடுத்தக்கட்டமாக நம் குழந்தைகள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் புடவைகளை விநியோகம் செய்வதன் மூலமாக வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். முதலீடு ஐந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரைத் தேவைப்படும். சில மொத்த வியாபாரிகளிடமிருந்து புடவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் விற்றது போக அந்தந்த மாதம் மீதம் உள்ள புடவைகளை திரும்பக் கொடுத்துவிட்டு புதுப்புது டிசைன்களில் மேலும் பல புடவைகளை வாங்கி வந்து விற்கலாம். வீட்டில் உள்ள மற்றவர்கள் காலையில் வேலைக்கும் பள்ளிக்கும் சென்ற பிறகு வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய ஓர் அற்புதமான தொழில் இந்த புடவை வியாபாரம். காலத்திற்கேற்றாற்போல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்தால், புடவைகளை வாங்கி வைக்க வேண்டியதில்லை. பணம் குறித்து பேரம் பேச வேண்டியதில்லை. சிரமமின்றி நல்ல வருமானம் பார்க்கலாம்.
மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கிறேன்! திருமதி சரஸ்வதி, எம்.ஆர்.சி.நகர், சென்னை.
காகிதப்பை
இன்றைக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது கேரி பேக் என்னும் பிளாஸ்டிக் பைகள். இவை மண்ணில் மக்கிப் போகாமல் மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதால் மக்கிக் போகக்கூடிய காகிதப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு அதற்கு வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இந்தத் தொழிலுக்கு முதலீடு என்று பார்த்தால் படித்துமுடிக்கப்பட்ட செய்தித்தாள்கள், காகிதத்தை ஒட்டுவதற்கு பசை, காகிதம் வெட்ட ஒரு கத்தரிக்கோல் மற்றும் ஒரு சிறிய அறை. தனியாகவோ அல்லது இரண்டு மூன்று பேர் சேர்ந்தோ இந்தக் காகிதப்பை தயாரிப்பில் ஈடுபடலாம்.
மாத இறுதியில் சேரும் நாளிதழ்களை (Daily News Paper) சேகரித்து எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே காகிதப்பை (Paper Bag) தயாரிக்கலாம். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தினமும் 4 அல்லது 5 மணி நேரம் இதற்கென ஒதுக்கினால் போதும். தயாரித்த காகிதப்பைகளை அருகிலுள்ள மருந்தகம், காய்கறி கடை என்று அனைத்துக் கடைகளுக்கும் விநியோகம் செய்யலாம். பெரிய அளவில் தொழில்நுட்பம் தேவைப்படாத தொழில் இது.
பொழுதுபோவதோடு வருமானமும் வருகிறது! திருமதி உஷா கிருஷ்ணன், நங்கநல்லூர், சென்னை.
‘‘வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதிலாக ஏதாவது செய்யலாமே என நேரம் போக்கவும், அதேநேரத்தில் நாலுபேர் சேர்ந்து பேசிக்கொண்டே ஏதாவது தொழில் செய்தால் நன்றாக இருக்குமே என நினைத்து பொழுதுபோக்காக ஆரம்பித்ததுதான் இந்த காகிதப்பை தயாரிப்புத் தொழில். பொதுவாக அனைத்து மெடிக்கல் ஷாப்புகளிலும் மருந்து வாங்கும்போது பேப்பர் பேக்கில் தான் மருந்துகளைத் தருவார்கள். அப்போது ஒரு கடைக்காரரிடம் நானும் இதேமாதிரி காகிதப்பை செய்து தரலாமா எனக் கேட்டேன். அவர் சரி என்று சொன்னதையடுத்து செய்து கொடுத்தேன்.
தொடர்ந்து வாங்க ஆரம்பித்த அவர் மூலம் அக்கம் பக்கத்து கடைகள் என செய்து கொடுத்து இன்று அது ஒரு தொழிலாக மாறிவிட்டது. தற்போது என்னிடம் 4 பேர் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கும் இந்தத் தொழில் வாய்ப்பைக் கொடு்ப்பதால் அவர் கூடுதலாக வருமானத்திற்காக 1 மணிநேரம் காகிதப்பை தயாரித்து சம்பாதிக்கிறார். சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒருவர் 200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். நமக்கும் பொழுதுபோவதோடு வருமானமும், நாலுபேருக்கு வேலையும் கொடுப்பதால் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.’’
மேலும் விவரங்கள் அறிய http://thozhilulagamtamil.blogspot.com/2018/06/blog-post_12.html
இணையதளத்தைப் பார்க்கவும்
தொழில் பற்றிய சரியான விவரம் இல்லை
ReplyDelete